மனசு செல்லும் பாதையும் வேகமும் கணக்கிடமுடியாதவை. நம் மனதை நாமே ஆராய்ந்து பார்க்கையில், யாருடனும் பகிர்ந்துகொள்ள இயலாத பல ஆச்சர்யங்கள் காணக்கிடைக்கலாம். அவை மற்றவருக்கும் தோன்றக்கூடியவை தாம். எனினும் அவை, யாரும் யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பாதவை. பகிர்ந்து கொண்டால் நம்மைப்பற்றிய தவறான மதிப்பீடுகளை உருவாக்கிவிடுமோ என மனக்கிடங்கில் பூட்டி வைக்கப்படுபவை.
மனதின் போக்கிற்கு எந்த இலக்கணமுமில்லை. எதற்கு சிரிக்கும், எதற்கு அழும், எதற்கு கோபப்படும் என எந்த விதிகளுமில்லை. அதன் லீலைகள் மிக இரசிக்கத்தக்கவை.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும், யாரிடமும் சொல்லப்படாத, வாழ்நாள் முழுதும் சொல்லவே முடியாத சில செய்திகள் நிச்சயமாய் இருக்கின்றன - என்பதை யாரவது மறுக்க முடியுமா? அவை மிகச்சிறிய விஷயங்களாகக்கூட இருக்கலாம். வெளியில் சொல்ல நம் மனது விரும்புவதில்லை. மனதின் விருப்பு வெறுப்புகள் சரி மற்றும் தவறுகளுக்கு அப்பார்ப்பட்டவை.
ஒரு நாள். ஒரே ஒரு நாள். உங்கள் மனதில் தோன்றும் அனைத்தையும் யாரிடமாவது பகிர்ந்துகொள்ள முயற்சியுங்கள். எச்சரிக்கை! அது உங்கள் வாழ்வையே கூட கலைத்துப்போட்டுவிடக்கூடும்! !
வயது ஏற ஏற... இப்படி சொல்லமுடியாத விஷயங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனதால், நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தையே விடவேண்டியதாகிவிட்டது.
இப்படிப்பட்ட எண்ணங்களை - என்னுடனும், உங்களுடனும் பகிர்ந்துகொள்ள இந்த பதிவை பயன்படுத்தலாம் என்றிருக்கிறேன். இந்த வலைப்பதிவு, சிலவருடங்களுக்குப்பிறகு தொடரப்படுகிற என் நாட்குறிப்பு. என் மனதை பாதித்த, குட்டி குட்டி விஷயங்களைக்கூட இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன். எல்லாவற்றையும் சொல்லாவிட்டாலும் பெரும்பாலான விஷயங்களை சொல்கிறேன். அவை உங்கள் மனதுடன் ஒத்துப்போகின்றனவா என பாருங்கள் :)
Friday, September 16, 2005
அறிமுகம்
தனியாக என்னைப்பற்றி சொல்ல ஏதுமில்லை. உங்கள் அனைவரின் மனங்களிளும் என்னைக்காணலாம். இதை, இந்த பதிவில் பகிர்ந்துகொள்ளப்படப்போகும் விஷயங்களை படிக்கையில் நீங்கள் உணரக்கூடும். இது நான் அல்ல. நாம்.
மனப்பத்தாயம்
பத்தாயம் என்பது, கிராமங்களில் தாணியங்களை சேமித்து வைக்கும் தாணியக்கிடங்கு. என் மனதும் ஒரு பத்தாயம் போலத்தான். என் மனக்கிடங்கில் சேர்க்கப்படுகிற எண்ணங்களில் சில உங்கள் பார்வைக்கு.
Subscribe to:
Posts (Atom)